மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 05.09.2022 அன்று சென்னை, பாரதி மகளிர்‌ கல்லூரி வளாகத்தில்‌ நடைபெற்ற விழாவில்‌, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாண்புமிகு தில்லி முதலமைச்சர்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை சார்பில்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ. 1000 வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டத்தினை தொடங்கி வைத்தார்‌.

மாநிலத்தின்‌ அனைத்து வளர்ச்சியிலும்‌ பெண்களுக்கு உரிய இடம்‌ வழங்கும்‌ பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம்‌ மற்றும்‌ சத்துணவுத்‌ திட்டத்‌ துறை என்ற பெயரை "சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை" என மாற்றம்‌ செய்துள்ளது.

பெண்கள்‌, குழந்தைகள்‌, மூத்த குடிமக்கள்‌, திருநங்கையர்‌ போன்றவர்களின்‌ நலனைக் காத்திடும்‌ வகையில்‌ அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.